ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுயில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வந்தது. அ.தி.மு.க., மற்றும் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் காலையில் சுறுசுறுப்பாக காணப்பட்டனர். மதியம் அ.தி.மு.க. முகவர்களுக்கு சூடாக கோழி பிரியாணிகள் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட அவர்கள் சிறிது நேரத்திலேயே ஒன்றன் பின் ஒருவராக வாக்குச்சாவடிகளை விட்டு வெளியே போகத் தொடங்கினார்கள்.

கணபதிபாளையம் என்ற ஊரில் உள்ள பூத்தில் கடைசியாக வெளியே வந்த அ.தி.மு.க முகவர் கதிர்வேல் என்பவரிடம் பேச்சுக் கொடுத்தோம், " என்னங்க வாக்குப்பதிவு முடிய இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேல் இருக்கிறது. இப்போதே வெளியே போகிறீர்களே " என்றோம். அதற்கு அவர் "போங்க சார் ஓட்டுப்போட வற்ற மக்கள் எல்லாம் எங்களை ஏதோ எதிரிபோல பாக்கறாங்க. இதுக்கு மேலே இங்கு இருந்து கேவலப்பட முடியாது" என கூறி விட்டுச் சென்றார் .
சொந்த கட்சி மீதே வெறுப்புடன் நடையை கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அ.தி.மு.க.வுக்கு அமைந்து விட்டதே....