ஈரோடு மாவட்டம் மரப்பாலம், குயவன் திட்டு பகுதியில் ஓடை புறம்போக்கை ஆக்கிரமித்து 32 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்த வீடுகளை அகற்றக்கோரி ஏற்கனவே மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றச் சென்றபோது இடைத்தேர்தல் வருவதால் எங்களுக்கு கால அவகாசம் கொடுங்கள் நாங்கள் வீடுகளை அகற்றி விடுகிறோம் என்று அப்பகுதி மக்கள் கூறியதால் அப்போது வீடுகளை அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று மீண்டும் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 4 பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. ஆக்கிரமிப்பு வீட்டைச் சேர்ந்தவர்கள் தங்களது பொருட்கள், உடைமைகளை தாங்களே வெளியே எடுத்துக் கொண்டு வந்தனர். மாநகராட்சி உதவி ஆணையாளர் சண்முக வடிவு மேற்பார்வையில் இளநிலை உதவிப் பொறியாளர் செந்தாமரை முன்னிலையில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் இன்ஸ்பெக்டர் தெய்வ ராணி தலையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 12 வீடுகளை அகற்ற சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.