Skip to main content

இ.பி.எஸ். கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம்! விளக்கம் அளித்த முதலமைச்சர்! 

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

EPS Attention-grabbing resolution brought! The Chief Minister explained!

 

சென்னை பெரம்பூர் கக்கன் ஜி காலனியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அதிமுக பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளராக இருந்து வந்தார். இவர், கடந்த 27 ஆம் தேதி இரவு கட்சி விஷயமாக வெளியே சென்றுவிட்டு தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டின் அருகே மறைந்திருந்த மர்ம நபர்கள், இளங்கோவனை வழிமறித்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் இளங்கோவன் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 

 

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் செம்பியம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வெட்டப்பட்டு இறந்து கிடந்த இளங்கோவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

இந்நிலையில், இளங்கோவன் கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் நேற்று அதிகாலை ரெட்டேரி ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே அதிதீவிர குற்றப்பிரிவு ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான போலிஸாரிடம் சரணடைந்தனர். அவர்களை செம்பியம் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.  அதில் அவர்கள் வியாசர்பாடி கக்கன் ஜி காலனியைச் சேர்ந்த சஞ்சய்(19), அருண்குமார் (28), கொடுங்கையூர் எம்.ஆர். நகரைச் சேர்ந்த கணேசன் (23), வியாசர்பாடி கருணாநிதி சாலை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (30) மற்றும் வியாசர்பாடி எஸ்.ஏ. காலனியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. 

 

மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், சஞ்சய்க்கும் இளங்கோவனுக்கும் ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக சஞ்சய் தனது நண்பர்களுடன் சேர்ந்து இளங்கோவனைக் கொன்றதாக தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

 

EPS Attention-grabbing resolution brought! The Chief Minister explained!

 

இந்நிலையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ். சட்டமன்றத்தில் அதிமுக பகுதிச் செயலாளர் இளங்கோவன் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதில் இ.பி.எஸ்., ‘கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக இளங்கோவன் தொடர்ந்து போலீஸுக்கு தகவல் தெரிவித்து வந்ததன் காரணமாக கொலை நடந்துள்ளது’ எனத் தெரிவித்தார். 

 

EPS Attention-grabbing resolution brought! The Chief Minister explained!

 

அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சென்னை பெரம்பூர் அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் முன்விரோதம் காரணமாகவே கொலை செய்யப்பட்டுள்ளார். இளங்கோவன், சஞ்சய் என்பவருடன் ஏற்கனவே முன்விரோதத்தில் ஈடுபட்டுள்ளார். போதைப் பொருள் விற்பனைக்கு எதிராக கொலை நடந்ததாக விசாரணையில் தெரிய வரவில்லை” என்று தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

“தமிழக அரசுக்கு நன்றி” - குகேஷ் நெகிழ்ச்சி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Thank you to the Government of Tamil Nadu Gukesh 

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் ஆவார்.

அதே சமயம் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு கனடாவில் இருந்து சென்னை வந்த செஸ் வீரர் குகேஷூக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்த தொடரில் முதல் இடம் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரை நடத்திய தமிழக அரசுக்கு நன்றி. அதாவது கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடர் உதவியாக இருந்தது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - 2023, சென்னை லீலா பேலஸில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.