தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு பதிவானது கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. மே 2 ஆம் தேதியான இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று காலை முதலே பல்வேறு கட்சிகளை சேர்ந்த முகவர்கள், கட்சி வேட்பாளர்கள், காவல்துறையினர் மற்றும் அரசுத் துறையை சேர்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் என பலரும் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு வந்தனர்.
மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு உள் நுழையும் ஒவ்வொருவருக்கும் முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்கியதோடு உடல் வெப்பமும் சரிபார்க்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் 6 மணி நிலவரப்படி தொடர்ந்து திமுக-156, அதிமுக-78 என்ற எண்ணிக்கையில் முடிவுகள் வெளியாகி வருகிறது. தொடர்ந்து மேலும் சில தொகுதிகளில் வெற்றி என்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
அதே போல் சில தொகுதிகளில் தற்போது வரை குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கடுமையான போட்டிகள் நிலவுவது போன்றே வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும் தற்போதைய நிலை வரையில் திமுக முன்னணியில் உள்ளது என்பதால் தமிழகமெங்கிலும் பரப்பரப்பாக உள்ளது. பத்தாண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியில் அமர உள்ள நிலையில் திமுக தொண்டர்கள் அதிக உற்சாகத்தில் உள்ளனர். கரோனா தொற்றை கருத்தில் கொண்டு ஆங்காங்கே கொண்டாட்டங்களை தடுப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு அதிகமாக போடப்பட்டுள்ளது.