அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் நீண்ட காலமாக விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் பட்டியல் அனுப்ப கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அரசுப்பள்ளிகளில் சில ஆசிரியர்கள் முன்னனுமதி பெறாமல் தொடர்ந்து நீண்ட காலமாக விடுப்பில் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து நீண்ட கால விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி, உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் விடுமுறை சார்ந்த விவரங்கள் தேவைப்படுகிறது. ஆகவே, நீண்டகால விடுப்பில் உள்ள ஆசிரியர்கள், நீண்டகால தகவலின்றி பணிக்கு வராதவர்கள் மற்றும் அடிக்கடி விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை மின்னஞ்சல் மூலம் உடனடியாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் தொடக்கக் கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.