
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு ஏப்ரல் 6- ஆம் தேதி அன்று தொடங்கிய நிலையில், மே மாதம் 10- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்று வரும், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நாள்தோறும் துறைச் சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் துறைச் சார்ந்த கேள்விகளுக்கு, சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அத்துடன், பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (12/04/2022) பொதுப்பணித்துறை (கட்டடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, பேசிய அமைச்சர் எ.வ .வேலு, "அ.தி.மு.க.வினரை நாங்கள் பகைவராக நினைக்கவில்லை; பகைவருக்கும் உதவக்கூடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சில நேரங்களில் நீங்கள் புரிந்துக் கொள்ளாமல் பிரச்சனைக்கு இழுக்கிறீர்கள். சென்னை தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை வரை ரூபாய் 485 கோடியில் உயர்மட்டச் சாலை அமைக்கப்படும்.
அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் உயர்மட்டச் சாலை அமைக்கப்படும். குன்றத்தூர் சாலை சந்திப்பில் ரூபாய் 322 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும். பாடி மேம்பாலம் அருகே ரயில்வே மேம்பாலம் ரூபாய் 100 கோடி மதிப்பில் அகலப்படுத்தப்படும். தாம்பரம் சண்முகம் சாலை அருகே ரூபாய் 10 கோடி மதிப்பில் இணைப்புச் சாலை அமைக்கப்படும். பொதுப்பணித்துறையில் 308 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, இன்றைய கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினர். இந்த நிலையில், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்து, உதயநிதியின் கார் தன்னுடைய கார் என்று நினைத்து, அதில் ஏற முயன்றார். அப்போது அவரது பாதுகாவலர்கள் இது நமது கார் இல்லை என்ற கூற, அதற்கு எடப்பாடி பழனிசாமி 'ஓ அந்த வண்டியா, ஓ சாரி' என்று கூறிவிட்டு, தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது காரில் ஏறி சென்றார்.