கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை சராசரி அளவைவிட அதிகமாகப் பெய்திருந்தாலும் புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் குறைவான அளவே மழை பெய்து பயிர்கள் கருகின. இதனால்,கடந்த 2022 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 2022 டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் 2022 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் முழுப் பருவத்திலும் போதிய மழையில்லாததால் பயிர்கள் கருகி, 33 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் பயிர் இழப்பு ஏற்பட்டதால், இம்மாவட்டங்களில் "மிதமான விவசாய வறட்சியை" அறிவித்திட அரசு ஆய்வு செய்தது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் மற்றும் மணமேல்குடி, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, காளையார்கோவில், தேவகோட்டை, மானாமதுரை, இராமநாதபுரம் மாவட்டம் போகளூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோயில், பரமக்குடி, ஆ.எஸ். மங்கலம், இராமநாதபுரம், திருப்புல்லானி, திருவாடானை, தென்காசி மாவட்டம் ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன் கோவில், தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி, விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் திருச்சுழி ஆகிய 25 வட்டாரங்களைச் சேர்ந்த சுமார் 1 லட்சத்து 42 ஆயிரத்து 832 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.
இதையடுத்து கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால் பாதிப்புக்குள்ளான புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 6 ஆயிரத்து 746 விவசாயிகளுக்கு 6 கோடியே 62 லட்சத்து 60 ஆயிரத்து 714 ரூபாயும், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 34 ஆயிரத்து 305 விவசாயிகளுக்கு 132 கோடியே 70 லட்சத்து 95 ஆயிரத்து 775 ரூபாயும், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 25 ஆயிரத்து 847 விவசாயிகளுக்கு 25 கோடியே 76 லட்சத்து 85 ஆயிரத்து 982 ரூபாயும், தென்காசி மாவட்டத்தில் 17 ஆயிரத்து 96 விவசாயிகளுக்கு 13 கோடியே 85 லட்சத்து 38 ஆயிரத்து 930 ரூபாயும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 61 விவசாயிகளுக்கு 4 லட்சத்து 43 ஆயிரத்து 273 ரூபாயும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 ஆயிரத்து 220 விவசாயிகளுக்கு 2 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 964 ரூபாயும், என மொத்தம் ஆறு மாவட்டங்களில் 25 வட்டாரங்களில் உள்ள 1 லட்சத்து 87 ஆயிரத்து 275 விவசாயிகளுக்கு 181 கோடியே 40 லட்ச ரூபாய் இடுபொருள் மானிய நிவாரண உதவி வழங்கிட தமிழ்நாடு அரசால் நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.