கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் மக்கள் சேவை மையம் சார்பில், கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் ஆணையத் தலைவருமான வானதி சீனிவாசன் மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “ஆடை சுதந்திரம் இருக்கலாம். ஒருவர் இப்படித் தான் ஆடை உடுத்த வேண்டும் இப்படி உடுத்தக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் மனிதனுக்கு ஆறாவது அறிவு ஒன்று பிறந்ததனால், நமக்கு எல்லை என்ற ஒன்று இருக்கிறது. அந்த எல்லை மீறி நாம் போக வேண்டாம். இல்லையென்றால் மிருகங்களுக்கும் நமக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போகும். நமக்குத் தெரியும் இதுதான் எல்லை என்று. அதனால் அந்த எல்லையைத் தெரிந்து கொண்டு நாம் ஆடை அணிய வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை இருக்கிறது. எனக்கு எனது புடவையை மீறி எந்த எல்லையும் தாண்டிப் போக முடியாது. சில பேருக்கு ஒரு சுதந்திரம் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் இவ்வளவு பெரிய கலாச்சாரம் இருக்கும் போது எல்லையைத் தாண்டி ஆடை அணிய வேண்டாம்” என்று கூறினார்.