விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் துரைமுருகன் கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி பேசுகையில், ''கலைஞரின் மனசாட்சியாக திமுக போற்றிய மாறன் இருந்த பொறுப்பிற்கு என்னை தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய தமிழக முதல்வருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக தன்னுடைய கொள்கைகளை எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்காது. பத்தாண்டு காலமாக பாஜகவுடைய எத்தனையோ மசோதாக்களை நாங்கள் எதிர்த்திருக்கிறோம். தொடர்ந்து சிறுபான்மை மக்களை; இந்த நாட்டை; அரசியல் சாசனத்தை; சமூக நீதியை காக்கக்கூடிய வகையில் திமுகவின் செயல்பாடுகள் தொடர்ந்து இருக்கும். இதுதான் முதல்வர் எங்களுக்கு சொல்லி இருக்கக் கூடிய அடிப்படை'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? ஆட்சி அமைக்க முடியவில்லை வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக என்ன நடவடிக்கைகளை எடுக்கும்' எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த கனிமொழி, 'இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நிச்சயமாக வலியுறுத்துவோம். நீட் தேர்வு விலக்குக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். அதுவும் இன்று கண்கூடாக எத்தனைக் குழப்பங்கள், எத்தனை மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நாடு முழுவதும் பார்க்கக்கூடிய ஒரு நிலை உருவாகியுள்ளது. தொடர்ந்து நீட்டுக்கு எதிராக திராவிட முன்னேற்ற கழகம் செயல்படும். அதேபோல் கல்வி கடன் ரத்து என்பதை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்'' என்றார்.