தஞ்சையில் நடைபெற்ற வங்கி நிகழ்ச்சி கூட்டத்தில் திமுகவினர் ரகளையில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தஞ்சையில் நிக்கல்சன் கூட்டுறவு வங்கி நகர வங்கி சங்கப் பேரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 116 வது ஆண்டு பேரவை கூட்டம் மற்றும் நிதிநிலை அறிக்கை கூட்டம் தஞ்சை வடக்கு வாசலில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. அதிமுகவை சேர்ந்த சரவணன் என்பவர் இக்கூட்டுறவு வங்கியின் தலைவராக இருக்கிறார்.
நிகழ்வில் கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் அன்புச்செல்வி நிதிநிலை அறிக்கையை கூட்டத்தில் வாசித்துக் கொண்டிருந்தபோது கூட்டத்திற்கு வந்த திமுக உறுப்பினர்கள் சிலர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிதிநிலை அறிக்கையை கடந்த ஆண்டு வெளியிட்டபோது தஞ்சையினுடைய சட்டமன்ற உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போது வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில் திமுக தலைவர், முன்னாள் முதல்வர் படம் வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது உள்ள தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் படங்கள் இடம்பெறவில்லை என கோஷங்களை எழுப்பி மேடைகளை தள்ளிவிட்டனர்.
இதனால் திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கு உடனடியாக மேலாண்மை இயக்குநர் இதுபோன்ற தவறுகள் இனி நடைபெறாது என மன்னிப்பு கோரினார். இருந்தபோதிலும் திமுகவினர் விடாமல் கோஷங்களை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியதோடு கூட்டமானது பாதியிலேயே முடிக்கப்பட்டது.