முன்னாள் தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞருக்கு, புதுக்கோட்டை மாவட்ட கட்சி அலுவலகத்தில் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. கலைஞரின் சிலையை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துப் பேசினார்.
அப்போது, 1974 -ஆம் ஆண்டு புதுக்கோட்டையை தனி மாவட்டமாக அறிவித்து, ஆட்சியர் அலுவலகத்திற்காக மன்னர் அரண்மனையை விலைகொடுத்து வாங்கினார் கலைஞர். அதேபோல, புதுக்கோட்டை மக்களின் குடிநீருக்காக ரூ.50 கோடி கட்டி நகராட்சியை மீட்டவரும் கலைஞர்தான். இந்த ஆட்சிக்கு மொத்த கெட்ட பெயரை ஏற்படுத்தியவர் அமைச்சர் விஜயபாஸ்கர். கரோனா பயத்தில் இருந்த மக்களுக்குப் படம் காட்டிக் கொண்டிருந்தவர். மரணத்திலும், பாதிக்கப்பட்டவர்களிலும் பொய் கணக்குக் காட்டியவரும் அமைச்சர் விஜயபாஸ்கர் தான். அவர் மீதான குட்கா வழக்கு இன்னும் நிலுவையில்தான் உள்ளது என்பதை நினைவூட்டுகிறேன். ஊழல் அரசுக்கு மத்திய பா.ஜ.க பாதுகாப்பு அளிப்பதால் அ.தி.மு.க அரசு அடிமையாக உள்ளது. மத்திய பா.ஜ.க அரசுக்குக் கப்பம் கட்டிவிட்டு அ.தி.மு.க அரசு கொள்ளையடித்துக்கொண்டு இருக்கிறது.
எய்ம்ஸ் இன்னும் வரவில்லை. மதுரையில் அடிக்கல் நாட்டிய செங்கல்லை காணவில்லை. எய்ம்ஸ் குழுவில் எம்.பி.க்கள் யாரும் இல்லை. சர்ச்சையில் சிக்கியவர்களே குழுவில் உள்ளனர். இவ்வாறு பேசினார்.
கலைஞர் சிலை திறப்பு விழாவோடு 300 இடங்களில் காணொலி திரைகளோடு காத்திருந்த திமுகவினர் மத்தியில் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பேசினார் மு.க.ஸ்டாலின்.