கச்சத்தீவு பிரச்சனையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க. தான். கச்சத்தீவு ஒப்பந்தத்தை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனை எதிர்த்து குரல் கொடுக்காமல் மவுனம் காத்ததுதான் துரோகம் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு எதிர்வினையாற்றியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், கச்சத்தீவு தாரை வார்ப்பு தொடர்பாக ஒப்பந்தம்தான் போடப்பட்டது என்றும், சட்டம் இயற்றப்படவில்லை என்றும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி என்பதற்கான ஆதாரங்களை தந்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் தான் என்றும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை கண்டித்து அப்போது நாடாளுமன்றத்தில் தி.மு.க. வெளிநடப்பு செய்தது என்றும், கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுப்பிய தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அ.தி.மு.க. என்றும், அன்றிலிருந்து இன்று வரை அ.தி.மு.க. தான் துரோகம் செய்து கொண்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். இந்தப் பேச்சினைப் பார்க்கும்போது, அவர் அடிக்கடி சொல்லும் “வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ" என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.
இராமேஸ்வரத்திற்கு வட கிழக்கே 10 மைல் தொலைவில் உள்ள கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி என்பதையும், 285.20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவின் சர்வே எண் 1250 என்பதையும், இதனை பரம்பரை பரம்பரையாக தமிழ்நாட்டு மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர் என்பதையும், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார் என்பதையும், ஆண்டுதோறும் இங்கு நடக்கும் விழாவிற்கு தமிழக மீனவர்கள் செல்வது வழக்கம் என்பதையும், இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்பதையும் வரலாற்றுப் பதிவேடுகள் நமக்குத் தெரிவிக்கின்றன இவையெல்லாம், கச்சத் தீவு மீது இந்தியாவிற்கு உள்ள பறிக்க முடியாத உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.
இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள், தொன்றுதொட்டு கச்சத்தீவின் அருகில் மீன்பிடித்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974 ஆம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர். கச்சத்தீவு தாரைவார்ப்பினை தடுத்து நிறுத்த முதலமைச்சர் என்ற முறையில் கலைஞர் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 1960 ஆம் ஆண்டுக்கு முன்பு, 1950-களில், மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி என்ற பகுதியை அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு கொடுக்க மத்திய அரசு முயன்ற போது, அதை மேற்கு வங்க மாநில அரசு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அப்போதைய மேற்கு வங்க மாநில முதலமைச்சர் பி.சி. ராய், இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்” என 1960 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. மேற்கு வங்க அரசின் இந்த சமயோசித நடவடிக்கை காரணமாக, பெருபாரி பகுதி இன்றும் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி 1974 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு செய்திருந்தால், கச்சத் தீவு இன்றும் கூட, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். ஆனால் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கலைஞர் இதைச் செய்யத் தவறி விட்டார். இந்த வரலாற்றை படித்துத் தெரிந்து கொள்ளாமல், தி.மு.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாகவும், அதையும்மீறி கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டது என்று கூறுவதும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1974-ல் கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல கேள்விக்கணைகளை தொடுத்தபோது, ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியவர் கலைஞர். ஆனால், ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு கலைஞருக்கு எல்லாம் தெரியும் என்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியவர் ஜெயலலிதா. குறைந்தபட்சம் இரண்டு முறை மிக விரிவான அளவில் மத்திய அரசு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞருடன் விவாதித்ததாக அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரண் சிங் மாநிலங்கள் அவையில் பேசியிருப்பதை ஜெயலலிதா சுட்டிக்காட்டினார்கள். எனவே, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞருக்கு தெரியாது என்ற வாதம் உண்மைக்குப் புறம்பானது. கச்சத்தீவு தாரை வார்க்கப்படப் போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்திருந்தும், அது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவோ அல்லது தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் போராட்டத்தை நடத்தி தாரைவார்ப்பினை தடுக்கவோ தி.மு.க. அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக ஒப்பந்தம் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பெயரளவிற்கு, சம்பிரதாயத்திற்கு, மென்மையான முறையில் 21-08-1974 அன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தின்மீது பேசிய திரு. ஆலடி அருணா அவர்கள், மத்திய அரசு ஆலோசனை நடத்தியதா என்று அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்களைக் கேட்டபோது, “வெளியுறவுத் துறைச் செயலாளர் கேவல் சிங்கை நான் டெல்லியில் சந்தித்தபோது இதைப் பற்றி அவர் என்னிடம் பேசினார். இதை ஆலோசனை என்று வைத்துக் கொண்டாலும் கூட நான் அவரிடம் சொன்னது; “தமிழ் மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; தமிழக அரசு இதை ஏற்றுக்கொள்ளாது. கச்சத்தீவு இந்தியாவுக்கே, தமிழகத்திற்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்லி மறு நாள் பிரதமரை சந்தித்தபோது, இதைப் பற்றி குறிப்பிட்டு சொன்னேன்" என்று கலைஞர் கூறியிருக்கிறார். இவையெல்லாம் சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்புகளில் இடம் பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் படித்து கச்சத்தீவு வரலாற்றினை தெரிந்து கொள்ளாமல், மனம் போன போக்கில் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுப்பிய தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுக தான் என்று தி.மு.க. தலைவர் கூறியிருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தான் தி.மு.க. தலைவர் குறிப்பிடுகிறார் என்று கருதுகிறேன். கச்சத்தீவு தாரைவார்ப்பு ஒப்பந்தம் குறித்து முன்கூட்டியே தெரிந்தும் அதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் போராடாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்காமல் மாபெரும் துரோகத்தை செய்த மாநில அரசினைக் கண்டிக்காமல், அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அரசை மட்டும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால்தான் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த உண்மையை மறைத்து பொத்தாம் பொதுவாக அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது என்பது உண்மைக்குப் புறம்பான தகவல்.
கச்சத்தீவு பிரச்சனையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க.தான். கச்சத்தீவு ஒப்பந்தத்தை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனை எதிர்த்து குரல் கொடுக்காமல் மவுனம் காத்ததுதான் துரோகம். 2008 ஆம் ஆண்டு கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தங்கள் செல்லத்தக்கவை அல்ல என்று ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தபோது, அதனை ஆமோதித்து பதில் மனுவை தாக்கல் செய்யாமல், “... uniform stand has to be taken both by the Central and State Governments" 660 கருத்து தி.மு.க. அரசால் அப்போது தெரிவிக்கப்பட்டதுதான் துரோகம். இந்தத் துரோகங்களை செய்தது தி.மு.க. கச்சத்தீவில் மட்டுமல்ல, காவிரி நீர்ப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, மாநில சுயாட்சி, மத்திய-மாநில வரிப் பங்கீடு என எல்லாவாற்றிலும் பல துரோகங்களை செய்த கட்சி தி.மு.க. இப்பொழுது வாய்கிழிய பேசும் தி.மு.க. தலைவர், 17 ஆண்டுகள் தொடர்ந்து மத்திய அமைச்சரவையிலே வளம் கொழிக்கும் இலாக்காக்களை வைத்துக் கொண்டிருந்தபோது கச்சத்தீவு பற்றி ஏன் வாய் திறக்கவில்லை? அடுத்த ஆண்டு வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து மீண்டும் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்து இருக்கிறார் தி.மு.க. தலைவர். இது பலிக்காது. மக்கள் தி.மு.க.வை பற்றி நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். வருகின்ற மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய வீழ்ச்சியை தி.மு.க. சந்திக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்