தமிழக சட்டமன்றத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 12- ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், ஒருபுறம் வேட்பு மனுத்தாக்கல், மற்றொரு புறம் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பிஸியாக உள்ளனர்.
இதனிடையே, தேர்தலுக்கான ஏற்பாடுகளில், இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் நேற்று (16/03/2021) வரை சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள அசாம், கேரளா, தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் ரூபாய் 331.47 கோடி மதிப்புடைய பணம், தங்க நகைகள், இலவசப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்த ஐந்து மாநிலங்களில் அதிகபட்சமாக தமிழகத்தில் ரூபாய் 127.64 கோடி மதிப்புடைய பணம், தங்க நகைகள் உள்ளிட்டவற்றை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள மதிமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் கவின் நாகராஜ் வீட்டிலும், தாராபுரம் தி.மு.க. நகரச் செயலாளர் கே.எஸ்.தனசேகர் வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் இன்று (17/03/2021) மாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில், பா.ஜ.க. சார்பில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகனும், தி.மு.க.சார்பில் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.