புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் மயிலாடுதுறை மாவட்டத்துக்கும் காலியாக இருக்கும் விருதுநகர் மாவட்டத்துக்குமான மா.செ.பதவியைக் கைப்பற்ற அதிமுகவில் ஏகத்துக்கும் மல்லுக்கட்டு துவங்கியுள்ளது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடமிருந்து விருதுநகர் மா.செ.பதவி சமீபத்தில் பறிக்கப்பட்டது. அந்தப் பதவியில் புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில், விருதுநகர் மா.செ.பதவியைக் கைப்பற்ற வைகைச்செல்வனும், மா.ஃபா.பாண்டியராஜனும் அதிக சிரத்தை எடுத்து வருகிறார்கள். வைகையை மா.செ.வாக்க எடப்பாடி விரும்புகிறார். ஆனால், மாஃபாவுக்கு சிபாரிசு செய்யும் ஓபிஎஸ், 'வைகைக்கு மாநிலப் பொறுப்பு ஒன்றைத் தந்துவிடலாம் ; அமைச்சராக இருப்பவர் மா.செ.வாக இருப்பதுதான் தேர்தல் காலத்தில் சரியாக இருக்கும்' எனச் சொல்லியிருக்கிறார். இதனால் விருதுநகர் மா.செ.பதவி ரேசில் ஜெயிக்கப்போவது மாஃபாவா? வைகையா? என்கிற பந்தயம் அதிமுகவில் கொடிகட்டிப் பறக்கிறது.
இந்த நிலையில், நாகை மாவட்டத்திலிருந்து இருந்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாதுறை மாவட்டத்துக்கு மா.செ.வை நியமிப்பது குறித்தும் ஓபிஎஸ்சிடம் விவாதித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நாகை மாவட்டதின் மா.செ.வாக இருப்பவர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாதுறை மாவட்டத்துக்கு தனது ஆதரவாளர் ஒருவரை கொண்டு வர மணியன் துடித்தாலும், அவருக்கு நம்பகமான அதிமுக நிர்வாகிகள் யாரும் இல்லை. அதனால் மயிலாடுதுறை மா.செ.பதவி ரேசில் முட்டி மோத அவர் விரும்பவில்லை என்கிறார்கள் நாகை ர.ர. க்கள்.
இந்த நிலையில், புதிய மாவட்டத்தில் மயிலாடுதுறை ராதாகிருஷ்ணன், பூம்புகார் பவுன்ராஜ், சீர்காழி பாரதி என 3 எம்.எல்.ஏ.க்கள் கோலோச்சுகிறார்கள். இவர்களில் பாரதி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். மற்ற இருவரும் வன்னியர் சமூகத்தினர். மூவருமே எடப்பாடியிடம் தனி செல்வாக்கை வளர்த்து வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும் ராதாகிருஷ்ணன் மற்றும் பவுன்ராஜ் இடையே தான் மா.செ.பதவியைக் கைப்பற்றுவதில் போட்டி அதிகரித்துள்ளது.
சீனியர் என்கிற முறையிலும், இருமுறை எம்.எல்.ஏ.என்கிற முறையிலும் தனக்கு பதவி வேண்டும் என மல்லுகட்டுகிறார் பவுன்ராஜ். அதேசமயம், பவுன்ராஜுக்கு மா.செ.பதவி கிடைத்துவிட்டால் மயிலாடுதுறையில் வருகிற தேர்தலில் போட்டியிடுவார் என்பதாலும் , அந்தச் சூழல் உருவானால் தனக்குப் போட்டியிட தொகுதி கிடைக்காது என்பதாலும் மா.செ.பதவியை எப்படியாவது கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறார் ராதாகிருஷ்ணன். இதனால் பதவியைக் கைப்பற்றுவதில் இரண்டு எம்.எல்.ஏ.க்களும் வேகத்தைக் கூட்டி வருகின்றனர். கட்சிப் பதவியைக் கைப்பற்றுவதில் அதிமுகவில் குஸ்திகள் அதிகரித்தபடி இருக்கின்றன.