விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் கிராமத்தில் உள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நேற்று (24-11-23) தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவிற்கு அம்மாவட்ட ஆட்சியர் பழனியும் பங்கேற்றார். அதன் பின்னர், மாவட்ட ஆட்சியர் பழனி விழா முடிந்தவுடன் அருகே உள்ள கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோவிந்தாபுரம், திருப்பச்சாவடிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அதில், கோவிந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சமையல் அறைக்குச் சென்ற ஆட்சியர் பழனி, அங்கு மாணவர்களுக்குத் தயாரிக்கப்படும் காலை உணவை உண்டு பரிசோதித்தார். அதன் பின்னர், அருகில் இருக்கக்கூடிய தொடக்கப்பள்ளிக்கு சென்றார். அங்கு 25க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வந்தனர். பள்ளி துவங்கும் நேரமாகி பள்ளி தலைமை ஆசிரியர் அங்கயற்கண்ணி மற்றும் ஆசிரியை மாலதி ஆகியோர் பணிக்கு வராததைக் கண்டு மாவட்ட ஆட்சியர் பழனி அதிர்ச்சியடைந்தார்.
அதன்பின், அவர் அங்குள்ள மாணவர்களிடம் நடத்தப்பட்ட பாடங்கள் குறித்தும், மனப்பாட பகுதிகளை ஒப்புவிக்கச் சொல்லியும் கேட்டார். மேலும், மாணவ மாணவிகளுக்கு பாடமும் நடத்தினார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனை தொடர்பு கொண்டு, பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் 2 பேர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், அவர்களைப் பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாடம் நடத்தும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.