கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் உள்ளது மாடாம்பூண்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் திருக்கோவிலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் பணியில் இருந்தபோதே கடந்த 2007ஆம் ஆண்டு இறந்து போய் உள்ளார். அதையடுத்து அவரது மகன் ஏழுமலை தனது தந்தையின் இறப்பையடுத்து தங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டி கருணை அடிப்படையில் தமிழுக்கு அரசுப் பணி வழங்குமாறு ஏழுமலை அரசுக்கு விண்ணப்பித்திருந்தார்.
அவரது விண்ணப்பத்தினை ஏற்றுக்கொண்ட அரசு கருணை அடிப்படையில் ஏழுமலைக்கு அவரின் கல்வித் தகுதிக்கு ஏற்ப திருக்கோவிலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பணி வழங்கப்பட்டு ஏழுமலை பணியில் சேர்ந்து அலுவலகப் பணிகளை செய்து வந்துள்ளார். அதன்பிறகு சங்கராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பணி மாறுதல் பெற்று சென்று பணி செய்து வருகிறார்.
இந்த நிலையில் ஏழுமலையின் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ கல்வி சான்றிதழ்கள் உண்மை தன்மை குறித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் ஏழுமலையின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போலி என தெரியவந்துள்ளது. இதுகுறித்து சங்கராபுரம் உதவி கோட்ட பொறியாளர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஏழுமலையை தேடி வருகின்றனர். இதற்கிடையே போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஏழுமலையை நிரந்தர பணி நீக்கம் செய்து நெடுஞ்சாலைத்துறை சென்னை முதன்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். கருணை அடிப்படையில் கிடைத்த வேலையை போலி சான்றிதழ் மூலம் ஏமாற்றியதற்காக தற்போது பணியை இழந்ததோடு கிரிமினல் குற்றத்தின் அடிப்படையில் வழக்கில் சிக்கி தலைமறைவாகி உள்ளார் ஏழுமலை.