குடிசை மாற்று வாரியம் திடீரென தீவுத்திடல் அருகாமையில் இருந்த வீடுகளை முன்னெச்சரிக்கையும், மாற்று ஏற்பாடும் செய்யாமல் அப்பகுதி மக்களை வெளியேறவைத்து வீடுகளை இடிந்து தரைமட்டம் ஆக்கினர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று தீவுத்திடல் அருகே எம்.எஸ்.நகர் பகுதியில் கூவம் ஆறு சீரமைப்புக்காகவும் ஆற்றின் ஓரம் இருக்கும் குடிசைகளை அகற்றவும் நேற்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வந்திருந்தனர். அப்பகுதி மக்கள், உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு பக்கவாட்டில் இருந்த கூவம் ஆற்றில் இறங்கி 13 பேர் உயிர் விடுவோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையில் இயக்குனர் பா.இரஞ்சித் நேரில் வந்து ஆறுதல் கூறி, கோரிக்கை விடுத்ததையடுத்து 13 பேரும் போராட்டத்தை கைவிட்டனர். போராட்டத்தை கைவிட்டு வெளியில் வந்த 13 பேரும் உங்களை மட்டுமே நாங்கள் நம்பி இருக்கிறோம் எங்களை காப்பாற்றுங்கள் என்று போராட்டத்தில் கண்ணிர் மல்க கூறினார்கள்.
இதனை தொடர்ந்து பேசிய இயக்குநர் ரஞ்சித், தமிழக அரசுக்கு மக்களை அகற்றுவதே வேலையாக உள்ளது. தொற்று காலத்திலும் அரசு அவர்களை வஞ்சிக்கிறது. தலைமைச் செயலகம் அருகாமையில் மாவட்ட ஆட்சியாளர், அரசியல் கட்சிகள் யாரும் வராதது பெரும் வருத்தத்தை அளிக்கிறது. ஆளும்கட்சியினர் சென்னை சுத்தப்படுத்தும் திட்டத்தை மட்டும்தான் சரியாக செய்து வருகின்றனர்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஓட்டு மட்டுமே ஆயுதம். வருகிற தேர்தலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு யார் துணையாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு எங்களுடைய ஆதரவு என்று ஒட்டுமொத்த மக்களும் கோரிக்கை விடுப்போம்.
374 குடும்பங்கள் இங்கே வாழுகிறது. எந்த ஒரு முன்னெச்சரிக்கை ஏற்பாடும் செய்யாமல் திடீரென்று வந்து வீட்டினை இடிப்பது பெரும் துரோகம். சட்டரீதியாக ஆக்கிரமிப்பை அகற்றினால் அப்பகுதியிலிருந்து 8 கி.மீ தொலைவுக்குள் இடம் தர வேண்டும். இந்த அரசு செய்து கொடுக்குமா. என கேள்வி எழுப்பினார்.