சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு பேரூராட்சிகளின் இயக்குநர் கிரன்குர்ரலா அண்ணாமலை நகர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
கிரன்குர்ரலாவை அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்றத் தலைவர் பழனி சால்வை அணிவித்து வரவேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 70.60 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் ரூ. 24.34 லட்சம் செலவில் தில்லோடை புனரமைப்பு பணி, கே.ஆர்.எம் நகர் பூங்கா புனரமைப்பு பணி, திடக்கழிவு மேலாண்மை பூங்காக்களை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பேரூராட்சியில் சிறப்பாக திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் நடைபெற்று வரும் பணிகளை விரைவில் முடிக்கவும் அறிவுறுத்தினார். இவருடன் கடலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் சண்முகம், செயல் அலுவலர் பாலமுருகன், இளநிலை பொறியாளர் கணேஷ், இளநிலை உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.
அப்போது அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி பேரூராட்சிகளின் இயக்குநரிடம் அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு சுகாதாரப் பயன்பாட்டிற்கு வாகனம் வாங்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை மனு அளித்தார். இதனை ஏற்று அனுமதி அளிப்பதாகக் கூறினார்.