தேனி மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள் பலர் ஒருங்கிணைந்து கடந்த 2 ஆண்டுகளாக பனை விதைகள் நடும் பணி மற்றும் ஆணி பிடுங்கும் திருவிழா என்ற பெயரில் மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகள், விளம்பர பதாகைகளை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தன்னார்வலர்களுக்குப் பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கும் வகையில் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் விழா நடந்தது. இந்த விழாவுக்கான மேடை பனை ஓலைகளால் வித்தியாசமான முறையில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழாவுக்கு உத்தம பாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நைனார் முகமது தலைமை தாங்கினார். கோவை ஓசை சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த காளிதாசன் கலந்து கொண்டு ‘சூழலியலும் தமிழ் மரபும்’ என்ற தலைப்பில் பேசினார். விழாவில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி கலந்துகொண்டு தன்னார்வலர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்கள், கேடயங்களை வழங்கினார்.
அதன்பின் விழாவில் பேசிய டி.ஐ.ஜி. முத்துசாமி, “நான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் இது மிகவும் வித்தியாசமான நிகழ்ச்சி. எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், சில இடங்களில் அங்கே ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காகப் பணி செய்தவர்களுக்கு மட்டும் பாராட்டு விழா நடத்துவார்கள் அல்லது ஒரு மரம் நடுவதற்கு மட்டும் கூடுவார்கள். அல்லது வேறு ஏதாவது ஒரு பணிக்காகக் கூடுவார்கள். ஆனால், எனக்குத் தெரிந்து தன்னார்வலர்களாகக் கல்வியாளர்கள், இளைஞர்கள், அரசியல்வாதிகள், சினிமா நடிகர்களின் ரசிகர்கள், விவசாயிகள் எனப் பல தரப்பு மக்களும் ஒன்றாகக் கூடி களப் பணியாற்றுவதைப் பெருமையோடு பார்க்கிறேன்.
உலகில் எதற்காக மழை பெய்கிறது என்று உங்களுக்குத் தெரியும். அறிவியல் பூர்வமாகப் பார்க்காமல் நம் பண்பாட்டு ரீதியாகப் பார்த்தோமானால் எதற்காக மழை பெய்கிறது? சேக்கிழார் புராணத்தில் ஒரு பாடலில் நல்லார் ஒருவர் இருந்தால் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்று குறிப்பிட்டு இருக்கும். தன்னார்வலர்களான நீங்கள்தான் அந்த நல்ல மனிதர்கள். உங்களுக்காகத்தான் இந்த மழை பெய்கிறது. நம்முடைய வாழ்க்கைக்கும் மனநிலைக்கும் சுற்றுப்புறச் சூழல் முக்கிய காரணம்.
நான் டி.ஐ.ஜி. என்கிற முறையில் காவல் துறையினருக்கு ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். நம்மிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் என்ற ஒரு சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் எதைச் செய்தாலும் அது குற்றம்தான். மரங்களின் மீது ஆணி அடித்து மரங்களைச் சேதப்படுத்துவது சுற்றுச்சூழலை பாதிக்கும் செயல் தான். அப்படிப்பார்த்தால் மரங்களில் ஆணி அடிப்பதும் குற்றம்தான். எனவே மரங்களில் ஆணி அடிக்கிறார்கள் என்பதைப் பார்த்து அவர்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அப்படி வழக்குப் பதிவு செய்வது என்பது இத்தகைய தன்னார்வலர்களின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்து காவல் துறையினர் செய்யும் கடமை.
மரங்களைப் பாதுகாப்பதில் மிகப்பெரிய பணியை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் பாராட்டுவதில், வாழ்த்துவதில், உங்களோடு சேர்ந்து பயணிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மரங்களுக்கும் உயிருண்டு என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா, மரங்களையும் ஒரு உயிராக மதிப்பதால் தான் நாமும் மனிதர்களாக வாழ்கிறோம்.
ஆதாம், ஏவாள், கற்காலத்திலிருந்தே தோன்றி நம்மோடு இருக்கும் மரம் தான் பனை மரம். அது நம்முடைய நாட்டுக்கே உரிய மரம். சேர, சோழ, பாண்டியர்களில் சேரனுடைய பூ பனம் பூ. பனைமரத்தில் இருக்கக் கூடிய எந்தப் பகுதியும் யாருக்கும் பயன்படாமல் போகாது. எல்லா பகுதியும் பயன்படக்கூடியது. இந்த பனை நடவு என்பது மிகச் சிறப்பான ஒரு காரியம். இந்த சிறப்பான பயணத்தில் நாங்களும் உங்களோடு இணைந்து இருக்கிறோம் என்று கூறினார்.
இந்த விழாவில் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் முத்துராஜ், சின்னக்கண்ணு, தேனி மேலப் பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறை பொதுச்செயலாளர் ராஜ மோகன், ரூரல் அப்ளிமெண்ட் தன்னார்வ அமைப்பின் தலைவர் சேக் கமர்தீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில், விக்னேஷ்பாபு மற்றும் தன்னார்வலர்கள் செய்து இருந்தனர்.