Skip to main content

சசிகலா முன்னிலையில் தினகரன் மகள் திருமணம்... கோயிலுக்குப் பதில் மண்டபம் இடம்மாறிய பின்னணி!

Published on 17/09/2021 | Edited on 17/09/2021

 

jh

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரனின் ஒரே மகளான ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூர் பூண்டி வாண்டையார் குடும்பத்தைச் சேர்ந்த துளசி வாண்டையார் பேரனுமான ராமநாதன் துளசி வாண்டையார்க்கும் செப்டம்பர் 16 ஆம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக செப்டம்பர் 15 ஆம் தேதி இரு குடும்பத்தாருக்கும் இடையே திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிச்சயம் நடைபெற்றது. சசிகலா நடராஜன் முன்னிலையில் இந்த நிச்சயம் நடைபெற்றது. திருமணமும் அவரது தலைமையிலேயே நடைபெற்றது.

 

இருதரப்பின் குடும்பத்தினர் அதிகளவில் இந்த திருமணத்துக்கு வருகை தந்திருந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழாவிற்காக செப்டம்பர் 16 ஆம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைக் கோயில் நிர்வாகம் சுட்டிக்காட்டி அதிகளவு கூட்டம் கோயிலுக்குள் வரவேண்டாம் எனக்கேட்டுக்கொண்டது. கோயிலுக்குள் திருமணத்துக்கான ஏற்பாடுகள் பல செய்யப்பட்டாலும் கூட்டம் அதிகம் வரக்கூடாது எனச்சொன்னதால் கோயிலுக்குள் திருமணம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் கோயிலுக்குப் பதில் மண்டபத்திலேயே திருமணம் வைக்கப்பட்டது. மண்டபத்திலேயே திருமணம் நடந்துமுடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வேலூர் தங்ககோவில் சாமியாரான சக்தி அம்மா என அழைக்கப்படும் சாமியார் தாலி எடுத்துத்தர திருமணம் நடைபெற்றது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. சசிகலா தனது அண்ணி இளவரசியுடன் சேர்ந்து மணமக்களை வாழ்த்தினார். கட்சிக்காரர்களை வரவேண்டாம் எனத் தினகரன் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தாலும் ஆயிரக்கணக்கான அமமுக நிர்வாகிகள் வந்திருந்தனர். அதைவிட அதிகமாகத் தொழிலதிபர்கள் வருகை தந்திருந்தனர். மதியத்துக்கு மேல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்த திருமணத்துக்காக வாண்டையார் குடும்பத்தினர் நகரில் உள்ள அனைத்து தகுதியான ஹோட்டல்கள் அனைத்திலும் அறைகள் பதிவு செய்து தங்களது உறவினர்களைத் தங்கவைத்திருந்தனர். இதனால் மற்ற திருமண வீட்டாரும், அமமுக நிர்வாகிகளும் தங்கும் விடுதிகளில் அறைகள் இல்லாமல் தவித்தனர். அமமுக தொண்டர்கள் மட்டுமல்ல, நிர்வாகிகளுக்கும் தினகரன் அழைப்பிதழ் தராததால் அவர்கள் அதிருப்தியாகிவிட்டனர். வெளி மாவட்டம் தவிர்த்ததோடு திருமணம் நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்டம், நகரத்தில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகளுக்கே அழைப்பிதழ் தினகரன் தரவில்லை, அழைக்கவுமில்லை எனக்கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்