Skip to main content

ஜெயலலிதாவின் வாரிசு என தன்னை காட்டிக்கொள்ள தினகரன் முயற்சி: உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி மனுத்தாக்கல்!

Published on 11/04/2018 | Edited on 11/04/2018


ஜெயலலிதாவின் வாரிசு என தன்னை காட்டிக்கொள்ள டிடிவி.தினகரன் முயற்சிப்பதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ரிஜாயிண்டர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ-வான டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் கொடி, அதிமுக கட்சி கொடி போல் உள்ளதால், அந்த கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவுக்கு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இன்று ரிஜாயிண்டர் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் "கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், அதிமுக-வின் புகழை நேர்மையற்ற வகையில் பயன்படுத்த முயற்சிக்கிறார். மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், அதிமுக கொடியைப் போல தன் கட்சிக் கொடியை வடிவமைத்துள்ளார். ஜெயலலிதாவின் படத்தையும், அம்மா என்ற பெயரையும் பயன்படுத்தி, தன்னை ஜெயலலிதாவின் வாரிசு போல காட்ட முயற்சிக்கிறார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, தினகரன் கட்சி கொடியில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பயன்படுத்துவதற்கு எதிராக கூடுதல் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என அதிமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

சார்ந்த செய்திகள்