சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடைபெறும் 84வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். இதனையொட்டி நேற்று மாலை அவர் சிதம்பரம் நகருக்கு வருகை தந்தார். இவரை பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் மற்றும் பதிவாளர் சீத்தாராமன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்தநிலையில் இன்று காலை 7 மணி அளவில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தமிழக ஆளுநர் வருகை தந்தார். இவரை சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் பொதுச்செயலாளர் கார்த்திக் தலைமையிலான கோவில் தீட்சிதர்கள் கும்ப மரியாதை அளித்து மேளதாள வாத்தியங்கள் முழங்க கோவிலுக்கு உள்ளே அழைத்துச் சென்றனர். பின்னர் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதனைத்தொடர்ந்து தில்லை கோவிந்தராஜ சன்னதியில் அவர் வழிபட்டார். அப்போது கோவில் தீட்சிதர்கள் கோவிலின் தலவரலாறு குறித்து எடுத்துக் கூறினார்கள்.
நடராஜர் கோவிலில் ஆளுநர் வருகையால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், சிதம்பரம் டி.எஸ்.பி ரமேஷ் ராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். தமிழக ஆளுநர் வரும் நேரத்தில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அவர்களை பரிசோதனை செய்து கோவிலுக்கு அனுப்பப்பட்டனர். இதனை தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அவர் சென்றார்.
ஆளுநர், நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் கோவில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டை ஆளுநர் மீறினாரா? என்று பேசுபொருளாகியுள்ளது. புகைப்படம் எடுக்கக்கூடாது என்று கனகசபை அருகே உள்ள அறிவிப்பு பலகையின் அருகே ஆளுநர் புகைப்படம் எடுத்துக்கொண்டதற்கு தீட்சதர்கள் எந்த ஒரு ஆட்சேபனையும் தெரிவிக்காமல் இருந்ததே இதற்கு காரணம். பொதுமக்கள் பக்தர்கள் யாராவது கோவிலைப் பற்றி தெரியாதவர்கள் கனகசபையின் அருகே செல்போனை அல்லது புகைப்பட கருவியை உயர தூக்கினாலே பெருத்த சத்தம் எழுப்பி அவர்களை அனைவர் மத்தியிலும் அசிங்கப்படுத்தும் தீட்சிதர்கள், புகைப்படம் எடுக்கக் கூடாது என்ற அறிவிப்பு பலகை கீழே நின்று ஆளுநர் புகைப்படம் எடுத்தபோது அமைதி காத்தது அனைவர் மத்தியிலும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
ஆளுநரின் இந்த செயல்பாடு குறித்து பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளத்தில் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கருவறை முன்பு புகைப்படம் எடுக்கக் கூடாது மீறி எடுத்தால் புகைப்பட கருவியை பறிமுதல் செய்யப்படும் என அறிவித்து. புகைப்படம் எடுத்தவர்களிடமிருந்து புகைப்படக் கருவிகளையும் பறிமுதல் செய்துள்ள நிலையில் ஆளுநருடன் வந்தவர்கள் கருவறை முன்பு ஆளுநர் தரிசனம் செய்யும் போது தொடர்ந்து புகைப்படம் எடுத்தனர். அதற்கு தீட்சிதர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதனை அங்கு நேரில் கண்டவர்கள் முணுமுணுத்தனர்.