தர்மபுரியில், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் உள்ளிட்ட இருவர், தீபாவளி இனாம் விவரங்களை நோட்டு போட்டு எழுதி வைத்திருப்பது லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தர்மபுரி- சேலம் பிரதான சாலையில் உள்ள எஸ்பி அலுவலகம் எதிரில் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மற்றும் தரக்கட்டுப்பாடு அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்தில் வியாழக்கிழமை (நவ. 12) மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடந்தது. தீபாவளியையொட்டி நடக்கும் இக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு மற்ற ஊழியர்கள் தீபாவளி இனாம் பெயரில் லஞ்சம் வழங்குவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, டிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையில் காவல்துறையினர், மதியம் 02.00 மணியளவில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
அந்த அலுவலகத்தில் பணியாற்றி வரும் சாலை ஆய்வாளர் அங்கப்பன், உதவி செயற்பொறியாளர் இளங்கோ ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத 7.85 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புப்பிரிவினர் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நள்ளிரவு வரை கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது.
சந்தேகித்தது போலவே அவர்கள் தீபாவளி இனாம் வசூல் வேட்டை நடத்தியிருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து கைப்பற்றிய சில வெள்ளைத் தாள்களில், எந்தெந்த அதிகாரிகள், ஊழியர்கள்¢ எவ்வளவு இனாம் கொடுத்தனர் என்றும் குறித்து வைத்திருந்தனர். அவர்களின் கடந்த ஒரு வார வங்கி வரவு செலவு விவரங்களையும் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் கேட்டுள்ளனர்.
சாலை ஆய்வாளர் அங்கப்பன், உதவி செயற்பொறியாளர் இளங்கோ ஆகிய இருவர் மீதும் லஞ்சம் வாங்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.