தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கிக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குளம் போல மழை நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது.
சென்னை மட்டுமல்லாது சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு முதல் மழை பொழிந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 324 ஏரிகளில் 22 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது. அதேபோல் 14 ஏரிகள் 50 சதவீதம் நிரம்பியுள்ளது. மேலும் சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
புழல் ஏரியில் முதற்கட்டமாக 100 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் தற்பொழுது உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 24 அடி ஆழம் கொண்ட ஏரியில் 20 அடிக்கு நீர் நிரம்பியதால் எச்சரிக்கை நடவடிக்கையாக முதற்கட்டமாக 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் 1,180 கன அடி நீர் வந்த நிலையில் தற்போது 2,000 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் 100 கன அடி நீர் இரண்டாவது ஷட்டரில் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு காரணமாக சிறுகளத்தூர், குன்றத்தூர், திருநீர்மலை, திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.