நடராஜர் கோவிலில் சிவ பக்தரைத் தாக்கிய 2 தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி கிராமத்தைச் சேர்ந்த சிவ பக்தர் கார்வண்ணன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். 61 வயதான இவர் கோவில் 21-ம் படி அருகே சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது கோவில் தீட்சிதர்களான கனக சபாபதி மற்றும் வத்தன் ஆகிய இருவரும் கார்வண்ணனைத் தரக்குறைவாகப் பேசி கீழே தள்ளிவிட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கார்வண்ணன், சிதம்பரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் 2 தீட்சிதர்கள் மீதும் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடராஜர் கோவிலில் திருமஞ்சன தேர்த்திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த வாரம் (17 ஆம் தேதி) நடந்தது. வரும் 25 ஆம் தேதி ஆனி திருமஞ்சன தேர்த் திருவிழாவும், 26 ஆம் தேதி தரிசன விழாவும் நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சிவ பக்தர்கள் பொதுமக்கள் லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.