Skip to main content

“சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல” - இந்து சமய அறநிலையத்துறை

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

 Department of Hindu Charities says Chidambaram Nataraja temple does not belong to the Dikshitars

 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபையில் ஆண்டாண்டு காலமாகப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏறி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில், கடந்த கொரோனா காலத்தில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தீட்சிதர்கள் அறிவித்தனர். இதனை அனைத்து தரப்பிலும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கொரோனா காலம் முடிந்த பிறகும் அவர்கள் தீட்சிதர்களைத் தவிர மற்ற யாருக்கும் அனுமதி இல்லை என அறிவித்தனர். இதற்குக் கண்டனம் தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு கோவிலில் கனகசபையில் ஏறி வழிபட அனைவருக்கும் அனுமதி உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது என அரசாணை வெளியிட்டது. இதனை ஒட்டி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கனகசபையில் தரிசனம் செய்து வந்தனர். 

 

இந்த நிலையில் ஆனித் திருமஞ்சனத் தேர் மற்றும் தரிசன விழாவையொட்டி தீட்சிதர்கள் நான்கு நாட்களுக்கு கனகசபையில் பொதுமக்கள் வழிபட அனுமதி இல்லை எனப் பதாகை வைத்தனர். இதற்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பதாகைகளை அகற்றச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுடன், தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர்.

 

இதனையொட்டி கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி மாலை தீட்சிதர்கள் வைத்த பதாகை அகற்றப்பட்டு பக்தர்கள் கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில். கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘தமிழக அரசின் அரசாணை, உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளதால், கோவிலின் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை. அதனால், அரசாணை சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும் என்றும், அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்’ எனவும் கூறியிருந்தது.

 

இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த ஜூலை மாதம் உயர்நீதிமன்றத்தில் வந்தபோது, சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதால் தீட்சிதர்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படும்? மேலும்,  தீட்சிதர்களின் உரிமை பாதிக்கப்படுவதாக ஒரு மூன்றாம் நபர் பொதுநல வழக்கு தொடர்ந்திருப்பது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி வழக்கை அக்டோபர் மாதத்தில் ஒத்திவைப்பதாக உத்தரவிட்டிருந்தது.

 

இந்த நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (14-10-23) சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது,  ‘சிதம்பரம் கனகசபை தரிசன நடைமுறையை மாற்றும் அதிகாரம் தீட்சிதர்களுக்கு இல்லை. கனகசபை தரிசனத்தை தடுப்பது ஆலயப் பிரவேச சட்டத்திற்கு எதிரானது. மேலும், சிதம்பரம் நடராஜர் கோவில் பொது கோவில், தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல என சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது” என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்