தமிழகமே தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் உள்ள நிலையில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் உள்ள அரசு பொதுமருத்துவமனையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 6 பேருக்கு மேல் மரணமடைந்துள்ள நிலையில், குடியாத்தம் பகுதியில் மட்டும் இரண்டு பேர் மரணத்தை தழுவியுள்ளார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் காய்ச்சலால் அரசு மருத்துவமனை, தனியார் மருத்தவமனை மற்றும் கிளினிக்குகளில் நோயாளிகள் கூட்டம் அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில் அக்டோபர் 26ந்தேதி காலை முதலே குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் அதிகமான புறநோயாளிகள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்துள்ளனர். 5 நாட்களை காய்ச்சல் தாண்டி விட்டால் ரத்த பரிசோதனை செய்வது நடைமுறை. அதன்படி குடியாத்தம் அரசு மருத்துவமனையில், கடந்த சில நாளாக ரத்தம், சிறுநீர் பரிசோதிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிகின்றனர்.
இந்த மருத்துவமனையில் இருப்பதோ 3 லேப் டெக்ஷியன்கள் மட்டுமே. இவர்களில் யாராவது ஒருவர் விடுமுறை எடுத்தாலோ அல்லது ரத்த தான முகாம் போன்ற மாற்றுபணிக்கு சென்றாலோ நோயாளிகள் நிலைமை பரிதாபத்துக்குரியதாகிவிடுகிறது. நீண்ட நேரம் காத்திருப்பு, கர்ப்பிணி பெண்களுக்க முன்னுரிமை, தொற்று நோய் அபாயம் போன்றவற்றால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த பிரச்சனைகளை கலைய உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து கூடுதலான லேப் டெக்னிக்ஷியன்களை தற்காலிகமாக மாவட்ட நிர்வாகம் நியமனம் செய்ய வேண்டும் அல்லது பயிற்சி மாணவர்களையாவது சேவை அடிப்படையில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை ஏழை மக்களிடையே எழுந்துள்ளது.