நியாய விலைக் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை கைவிடக் கோரி சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்த் தேசியப் பேரியக்க மகளிர் அணியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்து மனு அளித்தனர்.
இந்திய அரசின் வழிகாட்டுதல் படி தமிழ்நாடு அரசு 2023 ஏப்ரல் முதல் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் விலையில்லா அரிசியில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவது என்றும், குழந்தைகள் ஊட்டச்சத்து மையங்களிலும், சத்துணவுத் திட்டத்திலும் செறிவூட்டப்பட்ட அரிசியைப் பயன்படுத்துவது என்றும் முடிவு செய்து அறிவித்திருக்கிறது. அரிசியைத் தூளாக்கி அதில் பெரஸ்-ப்யூமெரேட் என்ற இரும்புச்சத்து மருந்தையும், பாலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகியவற்றையும் கலந்து மருந்துத் தொழிற்சாலைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்பட்டு 100 கிலோ சாதாரண அரிசிக்கு 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி என்ற விகிதத்தில் கலந்து வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தை கண்டித்தும், திட்டத்தை திரும்பப்பெறக் கோரியும், உணவு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்க மகளிர் அணியினர் வியாழக்கிழமை சிதம்பரம் நகர அமைப்பாளர் தில்லைக்கரசி தலைமையில் சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொறுப்பாளர்கள் புவனேஸ்வரி, பவித்தரா, தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுக்குழு உறுப்பினர் குபேரன், சுப்பிரமணிய சிவா, நகரச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராமதாஸிடம் வழங்கினர்.