போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகக் கடந்த டிசம்பர் மாதம் நோட்டீஸ் வழங்கி இருந்தனர். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அரசு சார்பில் இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இருந்தனர்.
இதற்கான பேச்சுவார்த்தை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதியும், ஜனவரி 3 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. மேலும் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் போராட்ட அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் உடனான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ''பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்க இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர்கள் அவர்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கிறார்கள். 15வது ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும், பணிபுரிகின்ற பணியாளர்களுடைய அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுடைய அகவிலைப் படியை உயர்த்தி தருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கிறார்கள். இதில் நிதி கூடுதலாக செலவாகின்ற சில விஷயங்களை நிதித் துறையோடு கலந்தாலோசித்து, இதுகுறித்து விவாதித்து முடிவு எடுத்த பிறகு தான் அறிவிக்கப்படும் என்ற காரணத்தினால், நாளை ஒருநாள் நேரம் கேட்டிருக்கிறோம். நாளை மறுநாள் மறுபடியும் பேசிய பிறகு விவாதிக்கலாம் என்று சொல்லி இருக்கிறோம். எனவே அவர்களுடைய போராட்ட அறிவிப்பை கைவிடக் கோரி நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. நாளை மறுநாள் பேசி முடிவு எட்டப்படும்'' என்றார்.