Skip to main content

மானியக் கோரிக்கைகள் மீது இன்று விவாதம்!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Debate on grant requests today

2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 20 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனையடுத்து பொது நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்தன. அச்சமயத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் காரணமாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்படாமல், பிப்ரவரி 22ஆம் தேதியுடன், தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் தான் ஜூன் 20 ஆம் தேதி தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் நேற்று (20.06.2024) கூடியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, “துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். கள்ளச்சாராய விவகாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதாகத் தமிழ்நாடு முதல்வர் தெரிவித்திருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டோருக்கு உடனே சிகிச்சை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவித்திருந்தார். 

Debate on grant requests today

இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (21.06.2024) காலை இயற்கை வளங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மாலையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை) (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை), மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகிய துறையின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின், எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழுவினர் மற்றும் அதிகாரிகள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தற்போதைய நிலவரம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர்கள் குழுவினர் எடுத்துக் கூற உள்ளனர். அதே சமயம் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையொட்டி சட்டமன்றத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவான பதிலளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்