சென்னை குடிநீர் வாரியம் சார்பில், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் கழிவுநீர் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இந்த வார்டுகளில் உள்ள 104 தெருக்களிலும் கழிவுநீர் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.52.69 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் அமைக்கப்படவுள்ளன. இந்த மேம்பாட்டு பணிகளை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தயாநிதி மாறன், “நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க.வினர் நடத்திய போராட்டத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தவறாக பேசிக்கொண்டு வருகிறார். இது அவரது விரக்தியை காட்டுகிறது. அவர் என்ன சாதனை செய்தார்? அவரது மகனும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவரும் அந்த தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை.
மத்திய பா.ஜ.க அரசை எதிர்த்து நிற்கும் ஒரே தைரியம் கொண்ட தலைவராகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மட்டுமே இருக்கிறார். வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி அமோக வெற்றி பெரும். நமது முதல்வர் மு.க. ஸ்டாலின் யாரைப் பிரதமராக காட்டுகிறாரோ அவர் கண்டிப்பாக நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பார்.
தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை எல்லாம் ஒரு தலைவரா? மக்கள் பிரச்சனைகளை திசை திருப்பும் வகையில் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். தமிழக ஆளுநர் அவரது அதிகாரங்களின் எல்லையை மீறி செயல்பட்டு வருகிறார். ஆளுநரை கண்டிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆளுநரின் வேலை ஒரு தபால்காரர் வேலைதான். ஆனால், அவர் தேவையில்லாமல் மற்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஆளுநர் பொறுப்பு என்பது அரசு பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு அளிக்கப்படும் ஒரு பொறுப்பு ஆகும். அது மாதிரியான பொறுப்பை வாங்கிக் கொண்டு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை எதிர்க்கும் கட்சிகளை இதுபோன்று சிரமத்துக்குள்ளாக்கி வருகிறார். இதன் மூலம், அடுத்தபடியாக மத்திய அரசு துணை ஜனாதிபதி அல்லது வேறு ஏதேனும் உயர் பொறுப்புகளை வழங்கும் என்ற ஆசையில் இதுபோன்ற தேவையில்லாத வேலைகளை ஆளுநர் ஆர்.என். ரவி செய்து வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி, ஊட்டியில் இருக்கக் கூடிய ஆளுநர் மாளிகையில் அவருடைய மகளுக்கு எந்த அடிப்படையில் திருமணம் நடத்தினார். தமிழக அரசின் பணத்தில் திருமணம் நடத்த அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இதற்கு ஆளுநர் ரவி பதில் அளிப்பாரா” என்று கேள்வி எழுப்பினார்.