கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள பொய்க்காநத்தம் என்ற கிராமத்தைச் சேர்ந்த செல்வநாதன் என்பவரது மகன் தமிழ்ச்செல்வன் (வயது 25). கூலித் தொழிலாளியான இவருக்கும் இவருடைய சகோதரி அலமேலு மகள் பதினேழு வயது சிறுமிக்கும் கடந்த ஜனவரி மாதம் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது.
சகோதரியின் கணவர் சில மாதங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்நிலையில் அலமேலு தனது கணவர் இல்லாமல் பிள்ளைகளை வைத்து கொண்டு குடும்பத்தை வழி நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளார். தனது சகோதரன் தமிழ்ச்செல்வனுக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுத்தால் தனது குடும்பப் பராமரிப்பை சகோதரன் பார்த்துக்கொள்வான் என்ற அடிப்படையில் இரு குடும்பத்தினரின் சம்மதத்தின் பேரில் 17 வயது சிறுமியை தமிழ்ச்செல்வன் திருமணம் செய்து கொண்டுடுள்ளார். மேலும் தனது சகோதரி குடும்பத்திற்கு பல்வேறு உதவிகளையும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சட்டத்திற்குப் புறம்பாக சிறுமியை தமிழ்ச்செல்வன் திருமணம் செய்துகொண்ட தகவலை சிலர் மாவட்ட சமூக நலத் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் நேரடியாகச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் 17 வயது சிறுமியை தாய்மாமன் தமிழ்ச்செல்வன் திருமணம் செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சமூக நலத்துறை அலுவலர்கள் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். அவர்களது புகாரின் பேரில் ஆய்வாளர் விஷ்ணு பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த தமிழ்ச்செல்வன், அவரின் தந்தை செல்வநாதன் மற்றும் சிறுமியின் தாயான தமிழ்ச்செல்வனின் சகோதரி அலமேலு ஆகிய மூவர் மீதும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாய்மாமனை திருமணம் செய்து கொண்ட சிறுமி தற்போது கர்ப்பிணியாக உள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.