காட்டுமன்னார்கோயில் அருகே திருநாறையூர் கிராமத்தில் உள்ள குளத்தில் சுமார் 5 அடி நீளமுள்ள 100 கிலோ மதிக்கத் தக்க முதலை ஒன்று உள்ளதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிதம்பரம் வனத்துறையினருக்கு புதன்கிழமை தகவல் அளித்தனர்.
அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவின் படி சிதம்பரம் வனச்சரக அலுவலர் வசந்த் பாஸ்கர் தலைமையில் சிதம்பரம் பிரிவு வனவர் பிரபு, சிதம்பரம் பீட் வனக்காப்பாளர் அன்புமணி, புவனகிரி பீட் வனக்காப்பாளர் ஞானசேகர் வனக்காப்பாளர் அலமேலு, வன ஊழியர்கள் புஷ்பராஜ், பாண்டியராஜன் ஆகியோர் முதலையைப் பத்திரமாகப் பிடித்துச் சிதம்பரம் அருகே வக்கராமாரி ஏரியில் விட்டனர்.
இந்த முதலைகள் மழைக்காலங்களில் ஏரியிலிருந்து வெளியேறி, வாய்கால் வழியாகச் சென்று, நீர்நிலைகளில் தஞ்சமடைகிறது. சில முதலைகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருகிறது. எனவே இதற்கு அரசு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.