Skip to main content

'மதுரையில் மேலும் இரண்டு நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு' - தமிழக அரசு அறிவிப்பு!

Published on 12/07/2020 | Edited on 12/07/2020

 

coronavirus lockdown madurai extended tn government announced

மதுரையில் மேலும் இரண்டு நாட்களுக்கு முழு ஊரடங்கை நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "மதுரை மாவட்டத்தில் நகர்ப்புறப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வந்த காரணத்தால், மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 24/06/2020 அதிகாலை 12.00 மணிமுதல் 30/06/2020 இரவு 12.00 மணிவரை ஏழு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இந்த முழு ஊரடங்கு உத்தரவானது முதலில் 05/07/2020 வரையும், அதன் பின்னர் 12/07/2020 நள்ளிரவு வரையும் நீட்டித்து ஆணையிடப்பட்டது.

 

இந்த முழு ஊரடங்கின் காரணமாக மதுரை மாவட்டத்தில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த காய்ச்சல் முகாம்கள் மற்றும் வீடுதோறும் நடைபெற்று வரும் ஆய்வு ஆகியவை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் மேற்கண்ட பகுதிகளில், முழு ஊரடங்கினை மேலும் இரண்டு நாட்கள் நீட்டித்தால், தற்போது நடைபெற்று வரும் தீவிர பணிகள் மூலமும், காய்ச்சல் முகாம்களில் எண்ணிக்கை அதிகரித்து நோய்த் தொற்று உள்ளவர்கள் அனைவரையும் கண்டறிந்து நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்த ஏதுவாக அமையும் என்பதால், மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள் பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 14/07/2020 நள்ளிரவு 12.00 மணியும் முடிய முழு  ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு உத்தரவு காலத்தில், ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் 14/07/2020 நள்ளிரவு 12.00 மணி முடிய தொடரும் என்று அறிவிக்கப்படுகிறது.

 

முழு ஊரடங்கு 14/07/2020 வரை அமலில் உள்ள மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில், 15/07/2020 அதிகாலை 12.00 மணி முதல் 31/07/2020 நள்ளிரவு 12.00 மணி வரை, இப்பகுதிகளில் 24/06/2020 முன்னர் இருந்த ஊரடங்கின் நிலை மீண்டும் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

 

மேற்சொன்ன நடவடிக்கையின் காரணமாக மதுரை மாவட்டத்தில், கரோனா வைரஸ் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த வாய்ப்புகள் ஏற்படும் என்பதால், பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்