கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுவும் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் ஒவ்வொருவரும் இடைவெளிவிட்டு நிற்க கட்டமோ, வட்டமோ ஒவ்வொரு கடையிலும் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வடசென்னை மற்றும் இராயபுரம் தொகுதியில் உள்ள பொதுமக்கள் சிரமம் இல்லாமல் காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்களை எளிதில் பெறும் வகையில் வடசென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் எம்.சி.ரோடு வீராஸ் துணிக்கடை எதிரில் அமைந்துள்ள இராபின்சன் விளையாட்டு மைதானத்தில் காய்கறி விற்பனை அங்காடி 31.03.2020 செவ்வாய் கிழமை முதல் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பொதுமக்கள் நன்மைக்காக செயல்படும் என்றும் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் வரிசையில் நின்று அலுவலர்கள் வழிகாட்டுதலின்படி ஒத்துழைப்பு கொடுத்து அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் சென்று பயனடையுமாறு கேட்டுக்கொள்வதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியிருந்தார்.
அதன்படி 31.03.2020 செவ்வாய்க்கிழமை இராபின்சன் விளையாட்டு மைதானத்தில் காய்கறி விற்பனை நடந்தது. பொருட்களை வாங்க வந்தவர்கள் வரிசையாக இடைவெளி விட்டு நிற்க வட்டம் போடப்பட்டிருந்தது. மக்கள் அந்த வட்டத்திற்குள் நின்றனர்.
ஆனால் பணம் கொடுத்து காய்கறிகள் அடங்கிய பையை வாங்கும் இடத்தில் நெரிசல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் இடித்துக்கொண்டும், உரசிக்கொண்டும் அந்தப் பைகளைப் பெற்றனர். கால் வலிக்க வெயிலில் நின்ற அத்தனை நேரமும் கடைசியில் பையைப் பெறும்போது பயனற்றதாக ஆகிவிடும் என்கிறார்கள் இதனை நேரில் பார்த்தவர்கள்.
அதிகாரிகளோ, அங்கு விற்பனை செய்பவர்களோ, மைக் மூலம் ஒவ்வொருவராகக் குறிப்பிட்டு அழைத்து பணத்தைப் பெற்றுக்கொண்டு அந்தப் பையை வழங்கியிருக்கலாம் என்கிறார்கள். மேலும் இந்த விஷயம் அமைச்சர் கவனத்திற்குக் கொண்டு சென்று அவர்தான் இதனை சரி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
அரசின் விற்பனை மையத்திலேயே இப்படி அலட்சியமாக இருந்தால் தனியார் வணிகம் நடக்கும் இடங்களில் அவர்களை எப்படிக் கண்டிப்பது என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.