
கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 500 பேருக்கு மேல் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் கூடுதல் படுக்கை வசதியுடன் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ள அரசு மகளிர் கல்லூரி விடுதியில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தற்போது 1,529 படுக்கையுடன் சிகிச்சை மையம் தயாராக உள்ளது. மேலும் மகளிர் கல்லூரி விடுதியில் 100 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் தயாராகி வருகிறது. தொடர்ந்து மகளிர் கல்லூரியில் கடந்த ஆண்டு செயல்பட்ட சித்த மருத்துவப் பிரிவும் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு வரும் வேட்பாளர்கள், முகவர்கள், அலுவலர்கள், போலீசார் என அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொண்டு வரவேண்டும். அதற்கான ஏற்பாடுகள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் செய்யப்படுகிறது. மேலும் கரோனா தடுப்பூசியும் போட்டுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி கரோனா தடுப்பு நடவடிக்கையாக சானிடைசர், முகக் கவசம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது இவ்வாறு கூறினார்.