Skip to main content

‘பணம் கொடுத்தால் கரோனா நெகடிவ் சான்றிதழ்’ - வாலிபர் கைது!

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

‘Corona Negative Certificate on Payment’-Youth Arrested

 

இந்தியாவில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா இரண்டாம் அலை பரவத் தொடங்கியது. உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்நாட்டு, சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு உள்நாட்டு விமான போக்குவரத்து படிப்படியாக அதிகரித்தபோதிலும், சர்வதேச விமான போக்குவரத்துக்கு இன்னும் தடை நீடிக்கிறது. சில குறிப்பிட்ட நாடுகளுடன் மட்டும் ஒப்பந்தம் செய்துகொண்டு, அந்த நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், தற்போது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் ஆகியோர் மட்டும் விமானத்தில் பயணிக்க அனுமதியளித்துவருகின்றனர். இந்நிலையில், போலி கரோனா நெகட்டிவ் சான்றிதழ் தயாரித்து, அதன் மூலம் நல்ல வருவாய் ஈட்டிய வாலிபர் சிக்கிய சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

சென்னை மண்ணடி தம்பு செட்டி தெருவில் மருத்துவ பரிசோதனை மையம் நடத்திவருபவர் ஹாரிஸ் பர்வேஸ் (30). இவரது மையத்தில் கரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது. இந்நிலையில், பர்வேஸ் நடத்திவரும் பரிசோதனை மையத்தின் பெயரில் போலியாக கரோனா சான்றிதழ் வழங்கப்படுவதாக பர்வேசுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக வாட்ஸ் அப்பில் வரக்கூடிய விளம்பரத்தையும் பர்வேஸ் பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில், விமான பயணிகளுக்கு ரூ. 500 கட்டணத்தில் உடனடியாக கரோனா பரிசோதனை சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு பர்வேஸ் வாட்ஸ் அப் செய்து ரூ. 500 பணத்தைக் கூகுள் பே மூலமாக அனுப்பியவுடன் உடனே கரோனா நெகட்டிவ் சான்றிதழ் பர்வேசின் எண்ணுக்கு வந்தது.

 

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பர்வேஸ், உடனடியாக பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விளம்பரத்தில் குறிப்பிட்ட எண்ணை வைத்து இந்த மோசடியில் ஈடுபட்ட திருவல்லிக்கேணியைச் சேர்ந்த இன்பர்கான் (29) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது நண்பர் உதவியுடன் கடந்த 6 மாதங்களாக மோசடி வேலையில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இன்பர்கான், தங்கம் உள்ளிட்டவற்றை வெளிநாட்டிற்கு கடத்துபவராகவும் செயல்படுபவர் என கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விமானம் மூலம் வெளிநாடு செல்லும் நபர்களைக் குறிவைத்து கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அளித்துவந்தது தெரியவந்தது.

 

குறிப்பாக கடந்த 6 மாதத்தில் 500க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்களிடம் ரூ. 500 பெற்றுக்கொண்டு அனைவருக்கும் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கியது தெரியவந்தது. மோசடி செய்து சம்பாதித்த பணத்தில் உல்லாசமாக இருந்துவந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கைதான இன்பர்கானை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இன்பர்கானின் நண்பரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.