
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடிகா் ரஜினிகாந்த் உருவ பொம்மை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான 100வது நாள் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து நலம் விசாரித்து நிதியுதவியும் வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி போராட்டத்தின்போது சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர் என்றார். ரஜினியின் இந்த கருத்து அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ரஜினிகாந்த் தூத்துக்குடி போராட்டத்தை கொச்சப்படுத்தியதாக பலரும் குற்றம்சாட்டி அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்தை கண்டித்து குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் அந்தோணி முத்து தலைமையில் நேற்று மாலை நாகர்கோவில் கலெக்டா் அலுவலகம் எதிரில் ரஜி்னியின் உருவ படத்தை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். திடீரென்று நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.