தமிழகத்தில் பொங்கல் திருநாள் தமிழர்கள் மத்தியில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாக உள்ளது. இதில் இயற்கையை வணங்கும் விதமாக தை 1-ஆம் தேதியில் சூரிய வழிபாடு, விவசாயத்துக்கு உதவும் மாடுகளுக்கு நன்றியுரைக்கும் விதமாக மாட்டுப் பொங்கலும் விவசாயிகளின் திருவிழாவாக ஆண்டாண்டு காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கலுக்கு தமிழக அரசு ரேசன் கார்டுகளுக்கு ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, பன்னீர் கரும்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ரூ 1000 பணத்தை, நிதி நிலையை காரணம் காட்டி இந்த ஆண்டு வழங்கவில்லை. இன்று (09/01/2025) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் சென்னை சைதாப்பேட்டை ரேஷன் கடையில் தொடங்கி வைத்திருந்தார்.
இந்நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி சட்டப்பேரவையில் பேசுகையில், 'அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்கு 2500 ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் அப்போது திமுக 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனக் கூறினீர்கள். ஆனால் தற்பொழுது இந்த பொங்கலுக்கு 1000 ரூபாய் கூட கொடுக்கவில்லை' என கேள்வி எழுப்பினார். அதேபோல் சிபிஐ கட்சியை சேர்ந்த மாரிமுத்து எம்எல்ஏவும், 'இந்த பொங்கல் பண்டிகை இனிக்க வேண்டும் என்று சொன்னால் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 'அதிமுக 2500 ரூபாய் கொடுத்தபோது 2021 ஆம் ஆண்டு தேர்தல் இருந்தது. அதனால் நீங்கள் 2,500 ரூபாய் கொடுத்தீர்கள். ஆனால் இப்பொழுது தேர்தல் காலம் இல்லை. தேர்தல் காலம் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை கொடுப்பது குறித்து பார்க்கலாம்' என பேசினார். இது பேரவையில் சர்ச்சையை ஏற்படுத்தியது.