18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக நடைபெற்றது. அதன்படி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாக தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று 01-06-24 அன்று 6 மணியுடன் முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிகாரிகள், முகவர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சீல் அகற்றப்பட்டு வருகிறது. அதேபோல் பதிவான தபால் வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வருகின்றன. அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து தபால் வாக்குகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
குமரியில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் கோணம் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. படிவம் 18 கொண்டு வரவில்லை எனக் கூறி முகவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தியதன் பின் முகவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் கரூரில் வாக்கு எண்ணும் பணிக்குச் சென்றபோது நுழைவு வாயிலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல வரிசை அமைக்கப்படாததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.