தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கு. செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டிருந்தார். இது குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கு. செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார். எஸ். ராஜேஷ் குமார் தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த கே.எஸ். அழகிரியின் பங்களிப்புகளைக் காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே சமயம் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டதையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், ‘இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் செல்வப்பெருந்தகைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்திட்ட அருமை நண்பர் கே.எஸ். அழகிரியின் எதிர்காலப் பணிகள் சிறக்கவும் - காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் குமார் செயல்பாடுகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன். இணைந்து பயணிப்போம்! இந்தியாவை வெற்றிபெறச் செய்வோம்!’ என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கு. செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அனுபவம் உள்ள தலைவர்களையும், அனுபவம் உள்ள தோழர்களையும் வைத்து காங்கிரஸ் கட்சி வலிமையானதாகக் கட்டமைக்கப்படும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் 38 தொகுதியில் எங்கள் கூட்டணியை மக்கள் வெற்றி பெற வைத்தார்கள். இந்த முறை 39 தொகுதிகளிலும் 100க்கு 100 சதவீதம் வெற்றி பெறுவோம். கடந்த முறையை விட பெரும்பான்மையான வாக்குகளில் வெற்றி பெற செய்வதற்கான எல்லா முன்னோட்டங்களையும் கையில் எடுப்போம்” எனத் தெரிவித்தார்.