சிவகங்கை தொகுதியில், வெற்றி பெற்று காங்கிரஸ் எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம், இன்று அவருடைய சொந்தத் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் குறித்து பார்வை மேற்கொண்டார். அதேபோல், கட்சி ரீதியாக நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றது. மீண்டும் சென்னை செல்ல விமானநிலையத்திற்கு வந்தவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் வலிமை குறித்து 234 தொகுதிகளிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதனை வைத்து திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தையில் எங்களுடைய பலத்தை நிரூபிப்போம்.
நீட் தேர்வுக்கு முன்பு 12 வருடத்தில், அரசுப் பள்ளி மாணவர்கள் 74 பேர் மட்டுமே, மருத்துவப் படிப்பிற்குத் தேர்வு செய்யப்பட்டார்கள். அதேபோல், நீட் தேர்வுக்குப் பிறகு, கோச்சிங் வகுப்புகளுக்குச் சென்றவர்கள் தான், மருத்துவத்திற்குப் போனார்கள். ஆனால், தமிழக அரசு கொண்டு வந்த 7.5% இட ஒதுக்கீடு, பெரிய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை நான் முழு மனதோடு வரவேற்கிறேன். தமிழகம் ஒரு வித்தியாசமான தேர்தலைச் சந்திக்கப்போகிறது என்று கூறினார்.
அமித்ஷா தமிழகம் வருகை குறித்த கேள்விக்கு, அமித்ஷா தமிழகம் வருவது என்பது ஒரு செய்தியா? இதைப் பெரிய செய்தியாக மாற்றி உள்ளனர். அப்படி என்றால் என்னுடைய தந்தை வீட்டிற்கு வருவதும் செய்திதான் என்று கூறினார்.
மேலும், ராஜீவ் காந்தி கொலை குறித்து பேசுபவர்கள், அவருடன் சேர்த்து இறந்து போன 16 பேர்களைப் பற்றி பேசுவதில்லை. என்னுடைய சொந்த ஊர்க்காரர் ஒருவரும் இறந்து போனார். அவர்களைக் குறித்துப் பேச யாரும் முன்வரவில்லை என்று கூறினார்.