கரூர் மாவட்டம், நெரூரை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் டாஸ்மாக் கடை புதிதாக கடந்த மாதம் 26ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கடைக்கு அருகில் அரசுப் பள்ளி, சர்ச் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. மது அருந்த வருபவர்கள், மது அருந்தி விட்டு சாலைகளில் பாட்டில்களை உடைப்பது, கடந்து செல்லும் பெண்கள், மாணவிகளை அறுவெறுக்கத்தக்க வார்த்தைகளால் திட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஆனால், அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அப்பகுதியைச் சுற்றியுள்ள நெரூர் என்.எஸ்.கே நகர், ஆர்.சி.தெரு, எம்.ஜி.ஆர் நகர் ஆகிய பகுதிகளை சார்ந்த கிராம மக்கள் டாஸ்மாக் கடையை முழுவதுமாக மூட வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுச் சுவர் நுழைவு வாயிலிருந்து கோஷம் எழுப்பியவாறு வந்த அவர்கள், ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நின்று கோஷம் எழுப்பினர். அப்போது, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மாற்றுத் திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கொண்டிருந்தார். அப்போது, கோஷம் எழுப்பியவர்களை நோக்கி வேகமாக வந்த ஆட்சியர், தயவுசெய்து முதலில் வெளியே செல்லுங்கள், இதில் என்ன பெருமை இருக்கிறது என கூறினார். அதற்கு அவர்கள் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளோம், ஆட்சியர் வீட்டிற்கு வரவில்லை என எதிர்ப்பு தெரிவித்தனர். மீண்டும் திரும்பி வந்த ஆட்சியர் மாற்றுத் திறனாளிகளிடம் மனு வாங்கிக் கொண்டிருப்பதால் அந்த பக்கம் வருமாறு அறிவுறுத்தினார்.
இதனால் அங்கே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது