நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று (27/10/2024) நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று முடிந்தன.
அதிகாலையில் இருந்தே பெரும்பாலான தொண்டர்கள் மாநாடு நடக்கும் இடத்திற்குப் படையெடுத்து வருகின்றனர். காலை 10 மணிக்கு மேல்தான் உள்ளே தொண்டர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்பாகவே தொண்டர்கள் உள்ளே புகுந்து நாற்காலிகளில் இடம் பிடிக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.
சென்னை தேனாம்பேட்டையில் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் தவெக கொடியுடன் மாநாட்டிற்கு சென்றபோது விபத்து ஏற்பட்டு இருவரும் படுகாயமடைந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல சென்னையை சேர்ந்த நிதிஷ்குமார் என்பவர் தனது நண்பர்களுடன் ரயிலில் விழுப்புரத்திற்கு டிக்கெட் எடுத்துச் சென்றுள்ளார். ரயில் இன்று அதிகாலை விக்கிரைவாண்டி சென்ற பொழுது ரயில் செல்லும் தண்டவாளத்தையொட்டி 50 மீட்டர் இடைவெளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பந்தல் உள்ளது.
இதனைப் பார்த்த உற்சாக மிகுதியில் நிதிஷ்குமார் உட்பட இரண்டு பேர் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முடிவு செய்தனர். அப்பொழுது கீழே விழுந்த இருவரும் படுகாயமடைந்தனர். இதில் இரண்டு பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நிதிஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் திருச்சியில் இருந்து மாநாட்டுக்கு சென்ற வாகனம் உளுந்தூர்பேட்டை அருகே சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே சென்னை தாம்பரம் அருகே மாநாட்டில் பங்கேற வந்தவர்களின் வேன் கவிழ்ந்த மற்றொரு விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்படியாக நடந்த நான்கு விபத்துகளில் இதுவரை மொத்தமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.