தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த முருகபாண்டியன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மண்டலம் உசிலம்பட்டி கிளை பேருந்து பணிமனையில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். அவருடன் பேரையூர் தாலுகா காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டி என்பவர் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். கடந்த 19 ஆம் தேதி பாபநாசத்திலிருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்ட அரசுப் பேருந்தில் முருகபாண்டியனும் பாண்டியும் பணியிலிருந்தனர்.
அந்தப் பேருந்தில் ராஜபாளையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தபோது மதுபோதையில் இருந்த பயணி ஒருவர் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளைப் பேசியபடி சில்மிஷத்தில் ஈடுபட, அந்தப் பெண் கூச்சலிட்டிருக்கிறார். அந்த நபரிடம் நடத்துநர் முருகபாண்டியன், “உனக்கு என்ன பிரச்சனை? எங்கே போகணும்? மொதல்ல டிக்கட் எடு..” என்று கூற, “அதெல்லாம் டிக்கட் எடுக்க முடியாது. நான் என்ன செய்தாலும் நீ என்னை கண்டுக்காத..” என்று அந்த நபர் பிரச்சனை செய்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, நடத்துநர், ஓட்டுநர் மற்றும் சில பயணிகள் அந்த நபரை அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டனர். அந்தப் பேருந்து ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டபோது, அந்த போதை நபரும் இன்னொரு நபரும் டூவீலரில் வந்து பேருந்தை மறித்திருக்கின்றனர். மற்றொரு டூவீலரில் வந்த 3 பேரும் சேர்ந்துகொண்டு 5 பேரும் பேருந்தில் ஏறி நடத்துநர் முருகபாண்டியனை மாறி மாறி அடித்ததோடு, பேருந்திலிருந்து கீழே இறக்கியிருக்கின்றனர்.
ஓட்டுநர் பாண்டியும் சில பயணிகளும் பேருந்திலிருந்து கீழே இறங்கி, நடத்துநர் முருகபாண்டியனைத் தாக்கிய நபர்களைச் சத்தம் போட்டுள்ளனர். அந்த நிலையிலும் அவர்கள் முருகபாண்டியனைப் பார்த்து “இன்னைக்கு நீ தப்பிச்சிட்ட. இனிமே நீ இந்த ஏரியா பக்கம் வரமுடியாது. உன்னை கொல்லாம விடமாட்டோம்..” என்று மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து, நடத்துநர் முருகபாண்டியன் அளித்த புகாரின் பேரில் சக்திவேல், பாண்டியன், முருகன், முருகானந்தம், மாரிமுத்து ஆகிய 5 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.