சிதம்பரம் தாலுகா காவல் ஆய்வாளர் பொதுமக்கள் மத்தியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த லால்புரம் ஊராட்சி மன்ற தலைவரை நாகரிகமற்ற வார்த்தைகளால் பேசியுள்ளார். மேலும், காவல் ஆய்வாளர் அநாகரிகமான வார்த்தைகளை நிபந்தனையின்றி திரும்பப் பெறவும், பொதுமக்களிடமும் ஊராட்சி மன்ற தலைவரிடமும் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மணிவாசகம், மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணை செயலாளர் குளோப், மாவட்ட நிர்வாகக்குழு சேகர் வட்ட செயலாளர் அன்பழகன், சிதம்பரம் நகரச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு காவல் ஆய்வாளரின் பேச்சைக் கண்டித்து புறவழிச்சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சிதம்பரம் டி.எஸ்.பி ரமேஷ்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போகச் செய்தார். இதனால் 15 நிமிடம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இவ்விவகாரத்தில் துறைரீதியான சரியான நடவடிக்கை இல்லையென்றால் போராட்டம் தொடரும் என்றும் அப்பகுதியினர் அறிவித்துள்ளனர்.