ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலின்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவர் கட்சி வேட்பாளரான மேனகாவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
கடந்த மாதம் 13ம் தேதி திருநகர் பகுதியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் அருந்ததியினர் குறித்து சீமான் பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக ஒரு பிரிவினர் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரைக்கு தடைவிதிக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்தினர். காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
தற்போது அதே பொதுக்கூட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூடுதலாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளைப் பெற்ற சீமான் மீதான வழக்கில் கூடுதலாக மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.