திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தை சேர்ந்தவர் மாணவி செல்வி. கடந்த மாதம் 22ந்தேதி மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் தான் அரசுப் பள்ளியில் படித்த மாணவி என்றும், தனக்கு கலந்தாய்வில் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் கிடைத்துள்ளதாகவும், தன்னால் ஆண்டுக்கு ரூபாய் 1.30 லட்சம் செலுத்தி படிக்க முடியவில்லை. எனது கல்வியினை தொடர கல்வி உதவித்தொகை தந்து உதவிடுமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார்.
அந்த மனு மீது அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, மாணவி செல்வி இருளர் இனத்தை சார்ந்தவர். இவரது தாய், தந்தை இருவருமே விறகு வெட்டும் வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை பராமரித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கல்லூரி நிர்வாகம் குறிப்பிடும் கட்டணத்தை அவர்களால் செலுத்த இயலாது என்பதை அறிக்கையாக தந்தனர்.
மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உடனடியாக சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தை தொடர்புகொண்டு மாணவிக்கு உதவிடுமாறு கோரினார். அவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை தான் வாங்குகிறோம், அதை குறைப்பதற்கு வாய்ப்பில்லை என தங்களது தரப்பின் கருத்தை தெரிவித்தனர்.
மரம் வெட்டி அதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தினை நடத்தும் நிலையான வசிப்பிடமற்ற இருளர் இனத்தை சார்ந்த மாணவி செல்வி உயர் கல்வி பயின்று நல்ல நிலைக்கு வந்தால், அவர் சார்ந்த பகுதியில் வசிக்கும் மற்றவர்களும் படிக்க தூண்டு கோலாக இருப்பார் என்பதால், மாவட்ட ஆட்சியர் கட்டண சலுகையுடன் படிக்க வாய்ப்பு அளிக்குமாறு வந்தவாசியில் உள்ள மற்றொரு தனியார் கல்லூரியான ஏஏபி கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். அந்த கல்லூரி நிர்வாகம் மாவட்ட ஆட்சியரின் கோரிக்கையினை ஏற்று 4 ஆண்டுக்கும் சேர்த்து ரூ.1.90 லட்சம் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும் எனக்கேட்டுக்கொண்டது.
சென்னை மருத்துவ கல்லூரிகள் இயக்குநரக தேர்வு குழுத் தலைவரை தொடர்புக்கொண்டு மாணவி நிலையினை எடுத்துரைத்து கல்லூரி மாற்றம் செய்து தருமாறு கோரினார். இதன் அடிப்படையில் 19.11.2018 தேதி அன்று மாணவிக்கு கல்லூரி மாற்றம் செய்து ஆணை பெறப்பட்டது. மாணவி செல்வி 20.11.2018 அன்று வந்தவாசி ஏஏபி கல்லூரியில் சேர்க்கப்பட்டார். மாணவி செல்வியின் நிலையினை தனியார் நிறுவனங்கள், நன்கொடையாளர்களை தொடர்பு கொண்டு எடுத்து சொல்லி உதவிடக் கோரியதை தொடர்ந்து, கல்வி கட்டணத் தொகை, தங்கும் விடுதிக்கான கட்டணம், தேர்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களுக்கான மொத்த தொகை ரூ.1.90 லட்சம் தனியார் நிறுவனத்திலிருந்து பெறப்பட்டது.
அந்த தொகையினை மாணவி செல்வியின் வீட்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி நேரில் சென்று ஊரார் முன்னிலையில் 1.90 லட்சத்திற்கான காசோலையினை அளித்து அக்குடும்பத்தினரை மகிழ்ச்சியடைய செய்தார், அக்கிராமத்தின் பெரியவர்கள் கலெக்டர் கந்தசாமியை வெகுவாக பாராட்டினர்.