
தஞ்சாவூரில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தஞ்சை தமிழ் பல்கலைககழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 2018-2019ஆம் ஆண்டில் 40 பேராசிரியர்கள் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த பாஸ்கரன், கடந்த மாதம் 20ஆம் தேதி தமிழக ஆளுநரால் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து, அப்பல்கலைக்கழகத்தில் சங்கர் என்பவரை பொறுப்பு துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டது.
40 பேராசிரியர்கள் நியமனத்தில், பொறுப்பு பதிவாளராக இருக்கக்கூடிய தியாகராஜனும் இருப்பதாகக் கூறி அவரை பதிவாளர் பதவியில் இருந்து நீக்கி பொறுப்பு துணைவேந்தர் சங்கர் கடந்த 24ஆம் தேதி உத்தரவிட்டார். சங்கர் என்பவர் பொறுப்பு துணை வேந்தர் மட்டும் தான், துணைவேந்தர் கிடையாது; எனவே, அவருக்கு இந்த அதிகாரம் கிடையாது என்று கூறி தியாகராஜன், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வெற்றிச்செல்வன் என்பவரை புதிய பொறுப்பு பதிவாளராக பொறுப்பு துணைவேந்தர் சங்கர் உத்தரவிட்டு ஆணையை பிறப்பித்தார். இதன் காரணமாக, வெற்றிச்செல்வன், இன்று காலை அவர் பதவியேற்பதாக இருந்தது. ஆனால், புதிய பதிவாளர் வெற்றிச் செல்வன் அறைக்குள்ளே நுழையாதபடி, தியாகராஜன் அறைக்கு பூட்டு போட்டு சென்றார். பதிவாளர் அறை பூட்டப்பட்டிருந்தால், வெற்றிச் செல்வன் துணை வேந்தர் அறையில் நீண்ட நேரமாக காத்திருந்தார். இதையடுத்து, துணைவேந்தர் தரப்பினர் காவல்துறை அனுமதியோடு பதிவாளர் அறையின் பூட்டை உடைத்தனர். அதன் பிறகு, புதிய பதிவாளர் நியமிக்கப்பட்டிருந்த வெற்றிச் செல்வன், உள்ளே சென்றார்.