கோவையை அடுத்த கோவில்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி கோகுல்ராஜ் மீது கோவையில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது நண்பர் மனோஜ் என்பவருடன் கோவை நீதிமன்றத்திற்கு கையெழுத்து போட வந்த கோகுல்ராஜை நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. அதனைத் தடுக்க வந்த மனோஜையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் நீதிமன்ற வளாகத்தில் பட்டப் பகலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்தக் கொலையில் ஈடுபட்ட கும்பலைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கோகுல்ராஜை கொலை செய்த கும்பல் கோத்தகிரியில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்த நிலையில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் கோத்தகிரி போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது கொலையில் சம்பந்தப்பட்ட ஜோஸ்வா (23), டேனியல் (27), எஸ்.கவுதம் (24), கவுதம் (24), பரணி சவுந்தர் (20), அருண்சங்கர் (21), சூர்யா (23) உள்ளிட்ட 7 பேரையும் கோத்தகிரி போலீசார் கைது செய்து தனிப்படையிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 7 பேரும் நேற்று கோவைக்கு இரண்டு கார்களில் அழைத்து வரப்பட்ட நிலையில் பாதியில் ஜோஸ்வா, எஸ்.கவுதம் ஆகியோர் தங்களுக்கு வாந்தி வருவதாகவும் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர். இதையடுத்து இருவரும் காரில் இருந்து கீழே இறங்க அனுமதிக்கப்பட்டனர். இதனை பயன்படுத்திக்கொண்ட ஜோஸ்வாவும் எஸ்.கவுதமும் தப்பி ஓடியுள்ளனர். அவர்களை போலீசார் துரத்திச் சென்றபோது புதரில் கிடந்த அரிவாளை எடுத்து போலீஸை தாக்கத் தொடங்கியுள்ளனர். அதில் யூசப் என்ற காவலருக்கு கையில் வெட்டுப்பட்டுள்ளது.
இதனால் காவல் உதவி ஆய்வாளர் இருளப்பன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து இருவரையும் நோக்கி சுட்டுள்ளார். அதில் ஜோஸ்வாவின் வலது காலில் இரண்டு குண்டுகளும், எஸ். கவுதமின் இடது காலில் ஒரு குண்டும் பாய்ந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் பிடித்த காவலர் யூசப் உட்பட மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.